திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி ஆலோசனை கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20-ம் நிதியாண்டிற்கு 1,829 பணிகளுக்கு ரூ.499 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் 30 ஏரிகளை புனரமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி ரூ.10 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் 10 ஏரிகளும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 9 ஏரிகளும், பொன்னேரி வட்டத்தில் 11 ஏரிகளும் என 30 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த 30 ஏரிகளில் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிகள், மதகுகள் சீரமைத்தல், புனரமைத்தல் பணிகள், வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகள், ஏரிப்பாசன கால்வாய் புனரமைக்கும் பணிகள் மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அதனை அகற்றி எல்லையை வரையறுக்கும் பணிகளை இந்த திட்டத்தில் மேற்கொள்வதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகளின் பங்களிப்பாக 10 சதவீத தொகையும் இந்த பணிகள் ஏரிநீரை பயன்படுத்தும் 50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் மூலம் சங்க பொறுப்பாளர்களை தேர்வு செய்து முறையாக சங்கம் பதியப்பட்டு விவசாய சங்கத்தினரே முன்னின்று பணிகளை செய்ய உள்ளனர்.

இந்த குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12 ஆயிரத்து 729 ஏக்கர் பாசனவசதி உறுதி செய்யப்படும். எனவே இந்த குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள பாசனதாரர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com