

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தாக்குதலில் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா அரசு அறிவித்த விதிமுறைகளின்படி அனைவரும் ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கடைகளை திறந்து உரிய சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி அனைவரும் முககவசம் அணிந்து பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். இருப்பினும் பொதுமக்கள் யாரும் இதை பின்பற்றவில்லை.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நகரின் முக்கிய பகுதிகளான ஜெ.என். சாலை, சி.வி.நாயுடு சாலை, பஜார் வீதி, நேதாஜி சாலை, செங்குன்றம் சாலை, காக்களூர் சாலை போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது மளிகை கடை, காய்கறி கடைகளில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் பொதுமக்களை எச்சரித்தனர். அப்போது நகராட்சி ஆணையர் சந்தானம் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன், துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன், கள உதவியாளர் கண்ணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் திருவள்ளூர் டவுன் போலீசாருடன் இணைந்து திருவள்ளூரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள 3 மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவற்றில் பொருட்களை வாங்க வந்தவர்கள் முககவசம் அணியாமலும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட 3 மளிகை கடைகளுக்கு சீல் வைத்தனர். அது மட்டுமல்லாமல் அங்கு இருந்த மற்றொரு மளிகை கடைக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இனிமேல் இதேபோல் நகராட்சி பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் சந்தானம் எச்சரித்தார்.
பின்னர் திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகளில் நகராட்சி அதிகாரிகள் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.