ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில், 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடக்கிறது

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் திருவாரூரில் 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில், 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடக்கிறது
Published on

கொரடாச்சேரி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு 122 ஜோடிகளுக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்கான விழா திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தங்க தாலி, பட்டுவேட்டி, பட்டு சேலை, கட்டில், பீரோ, குத்துவிளக்கு உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கு திருவாரூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்குகிறார்.

அமைச்சர்கள்

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோ.கோபால் முன்னிலை வகிக்கிறார். முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எல்.எம்.முகமது அஷரப் வரவேற்கிறார். முடிவில் திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அலங்கார வளைவுகள்

திருமண விழாவை முன்னிட்டு திருவாரூர் நகர் முழுவதும் சாலையின் இரு புறத்திலும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஆங்காங்கே அமைச்சர் மற்றும் பிரமுகர்களை வரவேற்று அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருமண விழாவிற்காக பிரமாண்ட மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மணமக்களுக்கு வழங்கப்படவுள்ள சீர்வரிசை பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com