

தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை குறிஞ்சி நகரில் உளள மலையடிவாரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தோகைமலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள பகவதி அம்மனை மனதுருகி வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே, தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்களை வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்வர்.
இங்கு, வைகாசி மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் காவிரி ஆற்றிலிருந்து மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். அப்போது தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பக்தர்கள் தீர்த்த குடம் மட்டுமின்றி பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தொட்டில் கட்டுதல், புஷ்ப பல்லக்கு எடுத்து ஊர்வலமாக வருவர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவில் தற்போது பாழடைந்தும், சுவர்கள் இடிந்தும் சீர்குலைந்து காணப்படுகிறது. அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட கூட முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் சிலர் கூறுகையில், அம்மனுக்கு நாங்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தோம். தற்போது இந்த கோவில் மிகவும் பழுதடைந்து பாழடைந்த நிலையில் உள்ளது. எங்களது கனவுகளில் அம்மன் வந்து, கோவிலை சுத்தப்படுத்த கூறினாள்.
ஆகவே, இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி அம்மனை குளிர்விக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோவிலை புதுப்பிக்க தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.