டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மது விற்பனை செய்வதை கண்டித்து 280 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து 280 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம் நடத்தியதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மது விற்பனை செய்வதை கண்டித்து 280 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் 280 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது. நேற்று மாலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் வந்து சென்றனர்.

இந்தநிலையில் மாலை 5.15 மணி அளவில் திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்த கார்மேகம்(வயது 33) என்பவர் திடீரென்று பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். அங்கிருந்த காவலாளி சத்தம் போட அதற்குள் செல்போன் கோபுரத்தில் ஏணியின் வழியாக மேலே ஏறிச்சென்றார். இவர் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக உள்ளார்.

50 அடி உயரத்தில் கோபுரத்தின் மேல் நின்றபடி, டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி நடக்கும் மது விற்பனையை தடுக்க வேண்டும். இதுகுறித்து தட்டிக்கேட்கும் தன்னை கொலைமிரட்டல் விடுக்கும் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி இருந்தார். அவருடன் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கவில்லை.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். 2 வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி கார்மேகத்தை மீட்க முயன்றனர்.

தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறியதை பார்த்ததும் கார்மேகம் மீண்டும் மேல்நோக்கி ஏறினார். பின்னர் 280 அடி உயரத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டதும் தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். திருப்பூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அங்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டார்.

புதிய பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் என அனைவரும் செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று போராட்டம் நடத்திய கார்மேகத்தை பார்க்க திரண்டனர். இதனால் பி.என்.ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

கார்மேகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். 1 மணி நேரம் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு கார்மேகம் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கினார்.

அங்கிருந்த போலீசார் கார்மேகத்தை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கோபுரத்தின் உச்சிக்கு சென்று கார்மேகம் நின்றதால் பி.எஸ்.என்.எல். இணைப்பு கருவிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். சேவைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை சீரமைக்கும் பணியும் நடந்தது.

இந்த சம்பவத்தால் நேற்று திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com