திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு செருப்பு, ஹெல்மெட், குடைகள் வைத்து இடம் பிடித்த மதுப்பிரியர்கள்

திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு செருப்பு, ஹெல்மெட், குடைகள் வைத்து மதுப்பிரியர்கள் இடம் பிடித்தனர்.
திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு செருப்பு, ஹெல்மெட், குடைகள் வைத்து இடம் பிடித்த மதுப்பிரியர்கள்
Published on

திருச்சி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், மதுப்பிரியர்களின் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது. இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின்படி, கடந்த 7 மற்றும் 8-ந் தேதி என 2 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கின.

அதன் பின்னர், ஐகோர்ட்டின் நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி மக்கள் நீதிமய்யம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அதன்படி, தமிழகத்தில் நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 183 மதுக்கடைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 34 கடைகள் தவிர, அதாவது, மாநகர் பகுதியில் 57 கடைகளும், புற நகரில் 92 கடைகளும் என மொத்தம் 149 கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

கடந்த முறை மதுபாட்டில் வாங்க வருபவர்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆதார் எண் கேட்கப்பட வில்லை. டாஸ்மாக் கடைகளில் 7 நாட்களும் 7 நிறங்களிலான டோக்கன் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நாள் அனைத்து கடைகளிலும் பச்சை நிற டோக்கன் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் புத்தூர் நான்கு ரோடு பகுதி உள்ளிட்ட இடங்களில் மதுப்பிரியர்கள் சமூக விலகலுக்காக வரையப்பட்ட வட்டத்திற்குள் செருப்பு, ஹெல்மெட் மற்றும் குடைகளை வைத்து இடம் பிடித்தனர். டோக்கன் கள் கடையில் இருந்து 100 மீட்டர் அப்பால் உள்ள இடத்தி லிருந்து வழங்கப்பட்டன. சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையிலும், டாஸ்மாக் கடை முன்பு கூட்டம் சேருவதை தடுக்கும் வகையிலும் 10, 10 நபர்களாக டோக்கன்கள் கொடுக்கப்பட்டது.

கடை முன்பு சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக விலகலுக்கான கோடுகள் சுண்ணாம்பு கொண்டு 1 மீட்டர் இடைவெளியில் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மதுபான கடைக்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்சி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு கலையரங்க வளாகத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. அங்கு பலர் முகம் வெளியே தெரியக்கூடாது என்பதால் தலைக்கவசமாக ஹெல்மெட் அணிந்திருந்தனர். முக கவசங்கள் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது.

இதுபோல திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள பாபு ரோடு, திருச்சி முதலியார் சத்திரம் ஆகிய இடங்களில் மதுப்பிரியர்கள் 500 மீட்டர் தூரத்திற்கும் மேலாக மதுபாட்டில்கள் வாங்க அணிவகுத்து நின்றனர். முதலியார் சத்திரத்தில் ரேஷன்கடை அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடையில் இருந்தது. ரேஷன் கடையில் பெண்கள் நீண்டவரிசையிலும், அதன் அருகில் மதுக்கடையில் ஆண்கள் பையுடன் மதுபாட்டில்கள் வாங்க நீண்டவரிசையிலும் எதிரும் புதிருமாக காத்திருந்தனர். டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com