திருச்சி எடமலைப்பட்டி புதூரில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 150 கடைகள் முன்பிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்களே தாமாக முன்வந்து அகற்றினார்கள்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

திருச்சி,

திருச்சி மாநகரில் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் ஓட்டல்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து தரைமட்டமாக்கி இடிபாடுகளை அகற்றி வருகிறார்கள்.அதன் ஒருபகுதியாக எடமலைப்பட்டி புதூர் மதுரை ரோட்டில் சாலையின் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடங்கள், மேற்கூரை, சிமெண்டு தளம், டீக்கடை, பேக்கரி கடை என 150-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.

ஆக்கிரமிப்புகளை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்றிட வேண்டும் என்றும், இல்லையேல் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து தள்ளப்படும் என கடந்த 3 மாதத்திற்கு முன்பே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புகளை அதன் உரிமையாளர்கள் அகற்றிட நேற்று கடைசிநாள் ஆகும்.

அதைத்தொடர்ந்து கிராப்பட்டியில் இருந்து ரெயில்வே மேம்பாலம் எடமலைப்பட்டி புதூருக்கு இறங்கும் இடத்தில் இருந்து மதுரை ரோட்டில் சாலையின் இருபுறமும் நேற்று காலை முதலே கடைகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை லாரியில் ஏற்றி சென்று கொண்டிருந்தனர். டீக்கடை, காய்கறி கடைகள், பழக்கடை, மளிகைக்கடை, சிமெண்டு விற்பனை நிலையம், சவுண்ட் சர்வீஸ் உள்ளிட்ட கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அவர்களே பிரித்து அகற்றிக்கொண்டனர்.

இதனால், நேற்று எடமலைப்பட்டி புதூர் பிரதான சாலை பரபரப்பாக காணப்பட்டது. 40 ஆண்டுகளாக இப்படித்தான் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பில் இருப்பதுகூட தெரியாமல் ஆக்கிரமிப்பில் கடை கட்டிய உரிமையாளர்களுக்கு பலர் வாடகை செலுத்தி கடைகள் வைத்திருந்தது இப்போதுதான் தெரிகிறது என வேதனையுடன் கூறினர்.

மேலும் இன்று(புதன் கிழமை) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் விடுபட்ட இடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்ற முடிவெடுத்துள்ளனர். அதற்காக நேற்று பிற்பகல் நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி உத்தரவின்பேரில், உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மேற்பார்வையில் சர்வேயர் கார்த்திக், ஆய்வாளர் பரமசிவன் ஆகியோர் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர்.

அளவீட்டின் மீது நெடுஞ்சாலைத்துறை இடத்தை சுமார் 4 மீட்டர் தூரம் வரை சில கடைக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தது கண்டறியப்பட்டது. சிலர் பகுதிகடை ஆக்கிரமிப்பாகவும், சில கடைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், அவை இன்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படும் என்றும் உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com