

திருச்சி,
கோவை மண்டலத்தை சேர்ந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதி அரசு பஸ் ஒன்று தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கரூரில் இருந்து நேற்று பகல் திருச்சி வந்தது. பஸ்சை டிரைவர் சரவணகுமார் ஓட்டி வந்தார்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பஸ்சை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். பின்னர், கண்டக்டர் ரவி பஸ்சில் இருந்து இறங்கி நேரக்காப்பாளர் அறைக்கு சென்றார்.
அப்போது அந்த வழியாக போதையில் சென்றுகொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென பஸ்ஸில் ஏறினார். பஸ்சில் யாரும் இல்லாததைக் கண்ட அவர், டிரைவர் சீட்டில் அமர்ந்து பஸ்சை ஸ்டார்ட் செய்தார்.
பின்னர் பஸ்சை அங்கிருந்து சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த பஸ் சாலையில் தாறுமாறாக அங்கும், இங்கும் சென்றது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே பஸ்சை வாலிபர் ஒருவர் ஓட்டி கொண்டு சென்றதைக் கண்ட டிரைவரும், கண்டக்டரும் ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறி பஸ்சை நிறுத்தினர். பின்னர் அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் உதவியுடன் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த போதை ஆசாமியை கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், திருச்சி மிளகுபாறையை சேர்ந்த அஜித்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது.
போதையில் இருந்த வாலிபர் பஸ்சை ஓட்டி சென்றபோது, அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. இன்னும் சிறிது தூரம் அவர் பஸ்சை ஓட்டி சென்றிருந்தால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.