சமூக இடைவெளி இல்லாததால் தாமதமாக தபால் வாக்கை பதிவு செய்த தேர்தல் பணியாளர்கள்; திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் தபால் வாக்களிக்க சமூக இடைவெளியின்றி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குவிந்ததால் தாமதம் ஏற்பட்டது.
சமூக இடைவெளி இல்லாததால் தாமதமாக தபால் வாக்கை பதிவு செய்த தேர்தல் பணியாளர்கள்; திருச்சியில் பரபரப்பு
Published on

தபால் வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் அந்தந்த தொகுதிகளில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய தபால் வாக்களிப்பில் 744 பேர் வாக்களித்து இருந்தனர். நேற்று 2-வது நாள் தபால் வாக்குப்பதிவு நடந்தது.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு தேசியக்கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்திலேயே தபால் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாமதமான வாக்குப்பதிவு

அதையடுத்து, பயிற்சியில் பங்கேற்க வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய தபால் வாக்கினை அளிக்க ஒரே இடத்தில் கூட்டமாக திரண்டனர்.பலரும் முக கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாமலும் முண்டியடித்து கொண்டு குவிந்தனர்.

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மெல்ல அதிரித்து வரும் நிலையில் பாதுகாப்பின்றி கூடி வாக்களிப்பது கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய தபால் வாக்களிக்கும் பணி, உரிய ஏற்பாடுகள் செய்யப்படாததால், 1 மணி நேரம் தாமதமாக 11.35-க்கு தொடங்கியது.

குளறுபடி

இப்படி, தேர்தல் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு தொடர் குளறுபடியாக உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் திவ்யதர்சினி உரிய நடவடிக்கை எடுத்து தொடர் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் தரப்பு கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையே 2-ம் கட்ட பயிற்சி வகுப்பிற்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com