

தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். அவரது வீடு அமைந்து உள்ள போல்டன்புரம் அருகே ராமசாமிபுரத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
டெல்லி சென்று திரும்பியவர், ராமசாமிபுரத்துக்கும், போல்டன்புரத்துக்கும் நடுவில் அமைந்து உள்ள மளிகை கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அதே கடைக்கு இறந்த மூதாட்டியும் சென்று வந்து உள்ளார். இதனால் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. பின்னர், மூதாட்டியிடம் இருந்து அவருடைய மகன், மருமகளுக்கும், அவர்களின் வீட்டின் மாடியில் வசித்து வரும் 5 பேருக்கும் பரவி உள்ளது. மருமகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் நோய் தொற்றுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றதால், அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு ஊழியருக்கும் நோய் தொற்று பரவி உள்ளது.
9 பேருக்கு பரவியது
இதன்மூலம் டெல்லி சென்று திரும்பிய ஒரு நபரிடம் இருந்து மூதாட்டி உள்பட 9 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவி உள்ளது. இந்த சங்கிலி தொடரை உடைப்பதற்கான பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழையவும், உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பரிசோதனை செய்த நோயாளிகள் மற்றும் சக ஊழியர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் சங்கிலி தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்க டாக்டர்களும், வருவாய்த்துறை அதிகாரிகளும் போராடி வருகின்றனர்.
ஒத்துழைப்பு
அவர்களுடன் பொதுமக்களும் கைகோர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும்போது, தவறாமல் முககவசம் அணிந்து செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
கடைகளின் முன்பு உள்ள தடுப்புகளை தொடுவதை தவிர்த்து இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கண், வாய், மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்கு வந்த உடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவ வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடல் அடக்கம்
முன்னதாக, மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் மூதாட்டியின் உடல் நேற்று முன்தினம் இரவு சிதம்பரநகர் மையவாடிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையிலான சுகாதார குழுவினர் மூதாட்டியின் உடலை 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி வைத்து புதைத்தனர். குழியில் ஒவ்வொரு இரண்டு அடிக்கும் கிருமிநாசினி கலவை தூவப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் முழுஉடல் கவச உடையை அணிந்து இருந்தனர். கொரோனாவுக்கு பலியான மூதாட்டிக்கு தூத்துக்குடியில் உறவினர்கள் பலர் இருந்தாலும், கொரோனா பயம் காரணமாக அவர்கள் மூதாட்டியின் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.