உப்புக்கோட்டையில் செயல்படாத வேளாண்மை விரிவாக்க மையம்

உப்புக்கோட்டையில் செயல்படாத வேளாண்மை விரிவாக்க மையத்தால் 15 கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உப்புக்கோட்டையில் செயல்படாத வேளாண்மை விரிவாக்க மையம்
Published on

உப்புக்கோட்டை,

போடி ஊராட்சி ஒன்றியம் உப்புக்கோட்டையில் தமிழக அரசு வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த மையத்தின் மூலம் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன்பட்டி, பத்ரகாளிபுரம், காமராஜபுரம், சடையால்பட்டி, போடேந்திரபுரம், குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் தரமான நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு போன்ற பயறு வகைகளின் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. சிலநேரங்களில் அரசின் சிறப்பு திட்டங்கள் மூலம் முகாம் அமைக்கப்பட்டு இலவசமாகவும் வழங்கப்பட்டது. இது தவிர விவசாயிகளுக்கு அத்யாவசியமான பூச்சிமருந்து தெளிக்கும் கருவி, நெல் அறுவடை செய்யும் எந்திரம் போன்ற நவீன கருவிகளும் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது.

விவசாயிகள் தண்ணீர் தேக்கி வைக்க 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகளும் வழங்கப்பட்டது. சிறப்பாக இயங்கி வந்த உப்புக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையம் கடந்த 2ஆண்டுகளாக சரியாக இயங்கவில்லை. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உதவி அலுவலர் வந்து செல்கிறார். இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உப்புக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்றாக செயல்பட்டு வந்தது. எங்களுக்கு தேவையான பயறு வகைகளின் விதைகள், உயிரி உரம் மற்றும் வேளாண்மை எந்திரங்களை மானிய விலையில் பெற்று வந்தோம். தற்போது இந்த மையம் சரிவர செயல்படவில்லை. இதனால் பயறு வகை விதைகள் மற்றும் உயிர் உரங்கள் போன்றவற்றை தனியார் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் நெல் மற்றும் பயர் சாகுபடியின் போது நோய் தாக்குதல் ஏற்பட்டால் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்கள் நோயை போக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி, அதற்கான பூச்சி மருந்துகளை கொடுப்பார்கள். எங்களுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி மானிய விலையில் வழங்குவதாக இருந்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே உப்புக்கோட்டையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை நாள் தோறும் திறந்து வைத்து விவசாயிகளுக்கு தேவையான பயிறு வகை விதைகள் மற்றும் உரங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com