

ஊத்துக்கோட்டை,
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்களின் பார்வை தற்போது ஆந்திரா பக்கம் விழுந்துள்ளது.
ஆந்திராவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் மதியம் 12 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்கலாம் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அங்கு மதுகடைகள் தி றந்துள்ளன.
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் தாசுகுப்பம் என்ற கிராமம் உள்ளது. இது ஆந்திராவை சேர்ந்த பகுதியாகும். இங்கே ஆந்திர மாநில மதுக்கடை உள்ளது. இதையொட்டி சென்னை, செங்குன்றம், மாதவரம் பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் காசுகுப்பம் கிராமம் சென்று மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். சிலர் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி சென்னை மற்றும் இதர பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் தாசுகுப்பத்தில் வாங்கும் மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு கடத்தி செல்கின்றனர்.
2 நாட்களாக ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை ஊத்துக்கோட்டையில் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மது பாட்டில்களை கடத்த முடியாமல் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். இநத நிலையில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று வாலிபர் ஒருவர் காய்கறி, மளிகை பொருட்களுடன் கூடிய மூட்டையை தலை மீது வைத்து சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் ரோந்து சென்றனர். சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து நிறுத்தி மூட்டையில் சோதனை செய்தபோது 40 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சென்னை மாதவரத்தை சேர்ந்த சின்னமணி (வயது 29) என்பது தெரிய வந்தது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் ஆந்திரா மதுபாட்டில்களை கடத்திய பூந்தமல்லி அருகே உள்ள விரிவாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் (38), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வாயலூர்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன் (30) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 154 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் கிராமத்தை சேர்ந்த வானவராயன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இிருந்து 6 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.