ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நடைபாதை கடைகள் அகற்றப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஊத்துக்கோட்டையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகள் விரைவில் அகற்றப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நடைபாதை கடைகள் அகற்றப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
Published on

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை தமிழக எல்லையில் அமைந்து உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி, கடப்பா, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பிரதான பகுதிகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். முக்கிய வழித்தடத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் நேரு பஜார் சாலை, திருவள்ளூர் சாலை, சத்தியவேடு சாலை, நாகலாபுரம் சாலைகளில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன.

இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் திக்குமுக்காடுகின்றன. பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் வாகன நெரிசலில் சிக்கி பாதிப்பு அடைகின்றனர்.

புகார் மனுக்கள்

மேலும் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம். வாகன நெரிசல் காரணமாக பூ, பழம் உள்ளிட்ட விளைபொருட்களை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தகுந்த நேரத்தில் எடுத்து செல்ல முடியாததால் நஷ்டம் அடைகின்றனர்.

ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனுக்களை அனுப்பிவைத்தனர்.

அகற்ற உத்தரவு

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நேற்று மாலை ஊத்துக்கோட்டைக்கு வந்தார். சாலையோர கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆவின் பால் பூத், அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அவர் பார்வையிட்டார். பால் பூத், அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை இன்று (வியாழக்கிழமை) மதியத்துக்குள் அகற்ற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

மேலும் நடைபாதை கடைகள் விரைவில் அகற்றப்படும் என்று செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com