வள்ளியூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்ம சாவு - அதிகாரிகள் விசாரணை

வள்ளியூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்ம சாவு - அதிகாரிகள் விசாரணை
Published on

வள்ளியூர்,

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஓட்டுப்பறை தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 56). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கூடங்குளம் அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிறிஸ்டோபர் குமரி மாவட்டம் தக்கலை அருகே பூமத்திவிளையை சேர்ந்த லீலாபாய் (55) என்பவருடன் செல்போனில் அடிக்கடி பேசியதாகவும், அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்கி செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா தலைமையில் போலீசார் லீலாபாய் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிறிஸ்டோபர் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கிறிஸ்டோபர் குறித்து லீலாபாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து லீலாபாயை மேல் விசாரணைக்காக வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் லீலாபாய் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும், போலீஸ் வாகனத்தில் லீலாபாயை ஏற்றி அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே லீலாபாயின் உடல்நிலை மோசமாகவே, உடனே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு லீலாபாயை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லீலாபாயின் கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரின்ஸ், வினில்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com