புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் 187 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 187 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் 187 பேர் கைது
Published on

புதுச்சேரி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை கண்டித்து புதுவையில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. புதுவை மாணவர் கூட்டமைப்பினர் நேற்று காலை நெல்லித்தோப்பு சிக்னல் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பழனிசாமி ஆகியோரின் முகமூடியை அணிந்த படி 2 பேரையும் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

அப்போது அவர்கள் 2 பேரையும் செருப்பு, துடைப்பம் மற்றும் கையாலும் அடித்து இழுத்து வருவது போல சித்தரித்து வந்தனர். ஊர்வலம் புதிய பஸ்நிலையம் அருகே வந்தது. அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் உப்பை கொட்டினர். பின்னர் அவர்கள் 2 பேருக்கும் உப்பை ஊட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு(எம்.எல்.) சார்பில் அண்ணாசாலையில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை கைது செய்தனர்.

ம.தி.மு.க. சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே மாநில செயலாளர் கபிரியேல் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பாவாடைசாமி, செல்வராசு, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு மாநில தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது அவர்கள் சென்ற பகுதிகளில் திறந்து இருந்த கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ்நிலையத்தை அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புதிய பஸ்நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் நேற்று காலை மறைமலையடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் முன்னிலை வகித்தார். இதில் செய்தி தொடர்பாளர் திருமுகம், முதன்மை செயலாளர் மோகன், இணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், துணை பொதுச்செயலாளர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com