வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா

வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா
Published on

ஆலந்தூர்,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கிவந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்த வியாபாரிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இதில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த தள்ளுவண்டி வியாபாரியின் மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவர். இதனால் வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி முழுவதும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

அதேபோல் தரமணியில் 2 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பகுதிகளில் அடையாறு மண்டல செயற்பொறியாளர் முரளி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மீனம்பாக்கம் 159-வது வார்டு காமராஜர் தெருவில் உள்ள கணவன், மனைவி, மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 3 பேரையும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அதேபோல் ஆதம்பாக்கம் 163-வது வார்டுக்கு உட்பட்ட கரிகாலன் தெருவில் காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஆலந்தூர் 12-வது மண்டலத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

பெருங்குடி 14-வது மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம் 169-வது வார்டு ராமலிங்கம் நகர் பாரதி தெருவை சேர்ந்த பெண்ணுக்கும், பஜார் ரோட்டில் இறைச்சி கடை நடத்தும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானதை அடுத்து இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் பெருங்குடி மண்டலத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com