வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகளுக்கு தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஓட்டல்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகளுக்கு தடை
Published on

வேலூர்,

நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. அதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவே இளைஞர்களும், பொதுமக்களும் புத்தாண்டை கொண்டாடுவார்கள். முக்கியமாக இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் 2-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்துகொண்டு அதிவேகமாக சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதுண்டு.

இதனால் புத்தாண்டையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இதுகுறித்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், மயில்வாகனன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்தபோலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. முக்கிய சாலைகள், பூங்காக்கள், மக்கள்கூடும் இடங்கள், வழிபாட்டுதலங்கள் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனையும் நடத்தப்படும்.

நள்ளிரவில் இளைஞர்கள் மது குடித்துவிட்டோ, 2 நபர்களுக்குமேல் அமர்ந்தோ இருசக்கர வாகனங்களில் அதி வேகமாக செல்வது, பைக் ரேஸ் நடத்துவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செல்போன் பேசிக்கொண்டு வேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப் படுவார்கள். இதனால் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா எடுக்க முடியாதநிலை ஏற்படும். சிறுவர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்சென்றால் அவர்களுடைய பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் அமைதியானமுறையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

அதேபோன்று ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது. அனுமதியின்றி ஏதாவது நிகழ்ச்சி நடக்கிறதா என்பதை போலீசார் கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com