வேலூர் மாவட்டத்தில் இ-சேவை, ஆதார் மையங்கள் திறப்பு

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இ-சேவை, ஆதார் மையங்கள் திறக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் இ-சேவை, ஆதார் மையங்கள் திறப்பு
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகம், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இ-சேவை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெறுவதற்காக பொதுமக்கள் நேரில் சென்று விண்ணப்பித்தனர்.

இதனால் அங்கு பொதுமக்களின் கூட்டம் நீண்ட வரிசையில் காணப்பட்டது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றும், மையங்களில் பயோ மெட்ரிக் முறை பயன்படுத்தப்படுவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது என வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது.

அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த மாதம் 5-ந்தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களை மூடும்படி உத்தரவிட்டார். அதன்படி அனைத்து மையங்களும் மூடப்பட்டன. மேலும் இ-சேவை மைய கதவில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேதி குறிப்பிடப்படாமல் மையங்கள் மூடப்படுவதாக நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய முடியாமல் பலர் அவதியடைந்தனர். மேலும் இ-சேவை மையங்களில் கல்வி, வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை, ஆதார் மையங்களை திறக்க உத்தரவிட்டார். அதன்பேரில் காலை 10 மணிக்கு மையங்கள் திறக்கப்பட்டன. மைய ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com