விக்கிரமசிங்கபுரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனை கூட்டம் 28-ந் தேதி முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு

விக்கிரமசிங்கபுரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனை கூட்டம் 28-ந் தேதி முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு
Published on

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் காரையாறு காணிகுடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவம், பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தனியார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கூட்டத்தின் நிலைமையை பொறுத்து 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலே அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும். கூட்டம் குறைவாக இருந்தால் மட்டும் அன்று வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

ஆனால் 29-ந் தேதியிலிருந்து 1-ந் தேதி வரை வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, பாத்திரம் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக அகஸ்பட்டியிலிருந்து நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்படும்.

விக்கிரமசிங்கபுரம் நகரசபை சார்பில், குடிநீர், தூய்மை பணி மேற்கொள்ளப்படும். 68 நிரந்தர கழிப்பிடங்கள் மற்றும் 400 தற்காலிக கழிப்பிடங்களும், மொபைல் வேன் கழிப்பிட வசதியும் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்படும். எந்த நேரமும் செயல்படும் மருத்துவ முகாம் செயல்படுத்தபடும். பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் இருப்பார்கள். பொதுமக்களின் உதவிக்காக தீயணைப்பு துறையினர் படகுடன் ஆற்று படுகையில் இருப்பார்கள்.

பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பக்தர்கள் குளிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதியில் குளிக்க செல்லக் கூடாது. கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். ஆடி அமாவாசை அன்று மட்டும் இருசக்கர வாகனங்கள் பாபநாசம் வரையும் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி (விக்கிரமசிங்கபுரம்), செல்வம் (கல்லிடைக்குறிச்சி), சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு, சொரிமுத்து அய்யனார் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கேடஸ்வரன், பாபநாசம் போக்குவரத்து துறை கதிரேசன், வனவர் மோகன், வனத்துறை அலுவலர் கார்த்திக் வாசன், நகரசபை தலைமை எழுத்தர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com