விக்கிரவாண்டியில், மணிலா விலை குறைவாக நிர்ணயித்ததால் விவசாயிகள் சாலைமறியல்

விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மணிலாவுக்கு விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் விவசாயிகள் சாலைமறியல் செய்தனர்.
விக்கிரவாண்டியில், மணிலா விலை குறைவாக நிர்ணயித்ததால் விவசாயிகள் சாலைமறியல்
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நேற்று 4 ஆயிரத்து 500 மூட்டை மணிலாவை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்த பிறகு நண்பகல் 1.30 மணி அளவில் விலை விவரங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மணிலா அதிகபட்சமாக 2024 ரூபாயும், குறைந்தபட்சமாக 1,800 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த விலை மிகவும் குறைவாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கடந்த 1-ந்தேதி நிலவரப்படி கூடுதல் விலை நிர்ணயிக்கக்கோரி திருச்சி-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், மருது, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், உதயகுமார், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜாக்குலின் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில், விலைகட்டு படியாகாத விவசாயிகள் தங்கள் மணிலா மூட்டைகளை அதற்கான அரசு கட்டணமின்றி திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பிற்பகல் 1.50 மணி முதல் 2.20 மணி வரை திருச்சி-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com