விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 6 மையங்களில் இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 6 மையங்களில் இன்று தொடக்கம்
Published on

விழுப்புரம்,

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இதனால் பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, செஞ்சி தரணி இண்டர்நேஷனல் பள்ளி, அரகண்டநல்லூர் லட்சுமி வித்யாலயா பள்ளி ஆகிய 4 மையங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களிலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் விழுப்புரம் மையத்தில் 561 ஆசிரியர்களும், திண்டிவனம் மையத்தில் 412 ஆசிரியர்களும், செஞ்சி மையத்தில் 301 பேரும், அரகண்டநல்லூரில் 254 பேரும், கள்ளக்குறிச்சியில் 635 பேரும், உளுந்தூர்பேட்டையில் 152 பேரும் ஆக மொத்தம் 2,315 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் கலெக்டர் அண்ணாதுரை, நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 4 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற இருக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்துவார். ஒரு அறையில் 8 ஆசிரியர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை பின்பற்றி நோய் தொற்று பரவாத வகையில் பாதுகாப்புடன் தங்களது பணியை மேற்கொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com