விழுப்புரம் மாவட்டத்தில் 11 பெண்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் 11 பெண்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 பெண்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்தது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயால் 226 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்ததில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது.

இவர்களில் 11 பெண்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் அருகே உள்ள கோனூர், கோழிப்பட்டு, சொர்ணாவூர் கீழ்பாதி, ராம்பாக்கம், அகரம்சித்தாமூர், அன்னியூர், ஏழுசெம்பொன், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர், சிறுகிராமம், ஆனத்தூர், டி.புதுப்பாளையம், பில்ராம்பட்டு, மேல்தணியாலம்பட்டு, வானூர், மயிலம் அருகே உள்ள பாதிராப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

293 ஆக உயர்ந்தது

இதை தொடர்ந்து, அவர்கள் 67 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோயால் 293 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

தற்போது வரை இந்நோயால் பாதிக்கப்பட்ட 43 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 92 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 பேரும், விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் 68 பேரும், விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் 52 பேரும் ஆக மொத்தம் 272 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு

இதுதவிர கோயம்பேட்டில் இருந்து வந்த 443 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 978 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com