விழுப்புரம் மாவட்டத்தில், 26 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் - பத்திரம் பதிவு செய்ய மக்கள் வராததால் வெறிச்சோடியது

விழுப்புரம் மாவட்டத்தில் 26 நாட்களுக்கு பிறகு பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் பத்திரம் பதிவு செய்ய மக்கள் யாரும் வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில், 26 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் - பத்திரம் பதிவு செய்ய மக்கள் வராததால் வெறிச்சோடியது
Published on

விழுப்புரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் ஏப்ரல் 20-ந் தேதி (நேற்று முன்தினம்) முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம், திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கண்டமங்கலம், வளவனூர், விக்கிரவாண்டி, அனந்தபுரம், அன்னியூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்கள் 26 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

இந்த அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர், இணை, துணை பதிவாளர்கள், சார் பதிவாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். மக்களின் வருகைக்காக அலுவலகத்திற்குள்ளும், அலுவலக வளாகத்திலும் 1 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக வட்டமிடப்பட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

ஆனால் ஊரடங்கு உத்தரவினால் பஸ், ஆட்டோக்கள் இயக்கப்படாததாலும், வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாலும் மற்றும் கொரோனா அச்சம் காரணமாகவும் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்லவில்லை. இதனால் அந்த அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

மேலும் ஒரு சில அலுவலகங்களில் மட்டும் பத்திரப்பதிவு குறித்த தகவலை பெறுவதற்காக ஒன்றிரண்டு பேர் வந்திருந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களில் ஒரு பத்திரம் கூட பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com