விழுப்புரம் மாவட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பேட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன் என்று புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பேட்டி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த முனுசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கே.கிருஷ்ணப்பிரியா விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்டத்தின் 30-வது முதன்மை கல்வி அலுவலராகவும், 3-வது பெண் அலுவலராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே இந்த மாவட்டம் எனக்கு பரீட்சயமான மாவட்டம். திண்டிவனத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி பின்னர் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றியுள்ளேன். விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக இதற்கு முன்பு பணியாற்றிய முதன்மை கல்வி அலுவலர் என்னென்ன முயற்சிகளை எடுத்தாரோ அந்த முயற்சிகளை தொடர்ந்து மேம்படுத்துவோம். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேர்ச்சி விகிதத்தில் 10 இடங்களுக்குள் இம்மாவட்டத்தை கொண்டு வர இலக்கு நிர்ணயித்து அதற்காக கடுமையாக உழைப்போம். ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். ஆசிரியர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால்தான் மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். சில ஆசிரியர்கள் 80 சதவீதம் தேர்ச்சி இருந்தாலே போதும் என்ற நிறைவுடன் இருக்கிறார்கள். அந்த ஆசிரியர்களை இன்னும் ஊக்கப்படுத்தி தேர்ச்சியை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் தேர்ச்சி பெற முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com