

சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் போது கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்வதும், பழுதாகி நிற்பதும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகளான மாறிவிட்டன. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும் வாகனங்கள் செல்வதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி 12 சக்கரங்கள் வரை உள்ள லாரிகள் மட்டுமே திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் பண்ணாரி சோதனை சாவடி மற்றும் ஆசனூர் சோதனை சாவடியில் போலீசாரும், வட்டார போக்குவரத்து துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
எனினும் போலீசாரையும், வட்டார போக்குவரத்து துறையினரையும் ஏமாற்றும் வகையில் லாரிகளின் டிரைவர்கள் நூதன முறையை கையாண்டனர். அதாவது 14 சக்கரங்களை ஓட்டும் லாரிகளின் டிரைவர்கள், அதில் உள்ள 2 சக்கரங்களை கழற்றி விட்டு எந்தவித இடையூறுமின்றி லாரிகளை ஓட்டி சென்றனர். சோதனை சாவடிகளை தாண்டியதும் பின்னர் 2 சக்கரங்களை மாட்டிவிட்டு செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இந்த நூதன முறை ஏமாற்றும் செயல் போலீசாருக்கும், வட்டார போக்குவரத்து துறையினருக்கும் தெரியவந்தது. எனவே 14 சக்கர வாகனங்கள் உள்ள லாரிகளில் 2 சக்கரங்கள் கழற்றப்பட்டு இருந்தாலும் அதன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிமோகாவில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று காலை பண்ணாரி சோதனை சாவடி வழியாக வந்தது. லாரியை கோபியை சேர்ந்த ஒருவர் ஓட்டி வந்தார். சோதனை சாவடி பகுதியில் வந்ததும் அங்கிருந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 14 சக்கரங்கள் கொண்ட அந்த லாரியில் 2 சக்கரங்கள் கழற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்த லாரியை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிவேல் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து பண்ணாரியில் நிறுத்தினர். வாகன விதிமுறைகளை மீறியதாகவும், அதிக அளவுக்கு பாரம் ஏற்றி வந்ததாகவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.