விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 209 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 4 பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 209 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 28,398 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 2207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 3,070 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்பட வில்லை. இதுவரை 827 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 240 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விருதுநகர் ஐ.சி.ஏ. காலனியை சேர்ந்த 31 வயது பெண் டாக்டர் மற்றும் அல்லம்பட்டி, ரோசல்பட்டி, கத்தாளம்பட்டி, வசுபதி காம்ப்ளக்ஸ், பெரியசாமி தெரு, முத்தால்நகர், முத்துராமன்பட்டி, கட்டையாபுரம், பாண்டியன்நகர், பாலாஜிநகர், அழகர்சாமி தெரு, ரோசல்பட்டி, வ.உ.சி.நகர், அய்யனார்நகர், லட்சுமிநகர், லிங்க்ரோடு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அய்யனார்நகரில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகாசி நேஷனல் காலனி, சாட்சியாபுரம், பாரதிநகர், பெரியகுளம் காலனி, பள்ளபட்டி ரோடு, வி.எஸ்.பி.நகர், விநாயகர் காலனி, சித்துராஜபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் 38 பேரும், அருப்புக்கோட்டையில் 4 பேரும், காரியாபட்டியில் 5 பேரும், மல்லாங்கிணற்றில் 3 பேரும், முகவூர் பகுதியில் 6 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9 பேரும், பாலவநத்தத்தில் 9 பேரும் மற்றும் கல்லூரணி, முத்துலிங்காபுரம், பந்தல்குடி, மம்சாபுரம், சத்திரப்பட்டி, தளவாய்புரம், எரிச்சநத்தம், ஆமத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2416 ஆக உயர்ந்துள்ளது. தளவாய்புரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர், விருதுநகரைச் சேர்ந்த 59 வயது ஆண், சாத்தூரைச் சேர்ந்த 60 வயது ஆண், 69 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் பரிசோதனை மையத்தில் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மதுரை தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து முடிவுகள் வெளி வருவதிலும் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் அதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com