விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,568 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 3,568 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,568 ஆக உயர்வு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32,365 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 3,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 2418 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை 1065 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 184 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் காந்திநகரை சேர்ந்த 38 வயது நபர், முத்துராமன்பட்டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, விக்னேஷ்காலனியை சேர்ந்த 49 வயது பெண், சின்னபேராலியை சேர்ந்த 23 நாள் குழந்தை உள்பட 273 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,568 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 752 மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 35 சதவீதம் பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பை தடுக்க வாய்ப்பு ஏற்படும்.

தொழில் நகரான சிவகாசியில் மாவட்டத்தின் மற்ற பகுதிகளை விட கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சிவகாசியில் ஒரு சில பகுதிகளை மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து மக்கள் நடமாட்டத்திற்கும், வணிக செயல்பாட்டிற்கும் தடைவிதித்துள்ளது. ஆனால் நகர்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடு இல்லாமல் நோய்பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் சிவகாசி பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்தி நோய்பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இல்லையேல் தொழில்நகரான சிவகாசி கொரோனா பாதிப்பால் முற்றிலும் சிதைத்து போகும் நிலை ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com