விருத்தாசலத்தில் மக்கள் சமூக நீதிப்பேரவையினர் தலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்

விருத்தாசலத்தில் மக்கள் சமூக நீதிப்பேரவையினர் தலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலத்தில் மக்கள் சமூக நீதிப்பேரவையினர் தலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்
Published on

விருத்தாசலம்,

மக்கள் சமூக நீதிப்பேரவை மற்றும் தமிழ்நாடு குறும்ப கவுண்டர் சங்கம் சார்பில் பூர்வகுடி குறும்பர் இனத்தின் கலாசாரத்தை காக்க கோரி விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் லட்சுமணன், கோவிந்தன், துரைசாமி, ஷோபனா சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குல தெய்வங்களான மகாலட்சுமி வீரபத்திரருக்கு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது பூர்வகுடி குறும்பர் இனத்தின் அடையாளம் ஆகும். மேலும் வழிபாட்டு உரிமையும் ஆகும். வீரத்தையும், கலாசாரத்தையும் உணர்த்துவதாக உள்ள இந்த நிகழ்ச்சியை அறியாத சிலர் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை இழிவுபடுத்தி பேசுவதுடன், அதனை தடைசெய்யவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

கலாசாரத்தை இழிவுபடுத்தும் நபரை கைது செய்ய கோரியும், பூர்வகுடி குறும்பர் இனத்தின் கலாசாரத்தை காக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்வாகிகள் சிலர் தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முத்துக்கண்ணு, சந்திரசேகர், மணிகண்டன், நடராஜன், மருதமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீதை சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர்.

அந்த புகாரில் சிற்பிராஜன் என்பவர் யூ டியூப் சேனல் மூலம் குறும்பர் இன மக்களின் குல தெய்வ வழிபாட்டை இழிவாக பேசி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகாரை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com