

விருத்தாசலம்,
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். இதில் இளைஞரணி பொன்.கணேஷ், கருப்புசாமி, வக்கீல்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், நிர்வாகிகள் கதிரவன், பாண்டியன், நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காலிகுடங்களுடன் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் தி.மு.க.வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளில் மக்கள் தெருத்தெருவாக சென்றும், விவசாய நிலங்களுக்கு சென்றும் குடிநீர் எடுத்து வருகிறார்கள். மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. அரசு குடிநீர் பஞ்சமே இல்லை என கூறி வருகிறது. பள்ளிக்கூடங்களில் குடிநீர் இல்லாததால் பள்ளிகளை இழுத்து மூட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபத்தில் வட மாநிலங்களுக்கு கொண்டு சென்று நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த லாபத் தொகையில் கடலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.