விருத்தாசலத்தில், செராமிக் நிறுவன உரிமையாளரிடம் போலி நகைகளை விற்க முயற்சி - தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

விருத்தாசலத்தில் செராமிக் நிறுவன உரிமையாளரிடம் போலி நகைகளை விற்க முயன்ற தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலத்தில், செராமிக் நிறுவன உரிமையாளரிடம் போலி நகைகளை விற்க முயற்சி - தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 52). இவர் செராமிக் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை மர்மநபர்கள் 3 பேர் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் 6 கிலோ தங்க நகைகள் உள்ளது. அதனை குறைந்த விலையில் வாங்கி கொள்கிறாயா? என கேட்டுள்ளனர். அதற்கு அந்த வாலிபர் என்னிடம் பணம் இல்லை.

எனவே நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் கேட்டு பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி தங்க நகைகள் குறித்த விவரத்தை அந்த வாலிபர் அசோக்குமாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர், அந்த 3 பேரிடமும் உங்களது போன் நம்பர் கொடுங்கள், பணம் தயார் செய்துவிட்டு நகை வாங்குவது குறித்து உங்களிடம் தகவல் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து மர்மநபர்கள், போன் நம்பரை கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று அசோக்குமார் போன்மூலம் மர்மநபர்களை தொடர்பு கொண்டு பணம் தயார் செய்துவிட்டேன். நகைகளை எங்கு வந்து வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், விருத்தாசலம் ஸ்டேட் வங்கி அருகே வாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி அசோக்குமார் அங்கு வந்தார். அவர்களிடம் மர்மநபர்கள் 3 பேரும் தாங்கள் கொண்டு வந்த நகையை காட்டினர். அதனை பார்த்து சந்தேகமடைந்த அசோக்குமார், அந்த நகைகளை பரிசோதித்து பார்த்தார். அப்போது அது போலி நகை என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடிக்க முயற்சி செய்தார்.

ஆனால் அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். இதையடுத்து பிடிபட்டவரை விருத்தாசலம் போலீசில் அசோக்குமார் ஒப்படைத்தார். இதையடுத்து பிடிபட்டவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த துலாராம் மகன் சங்கர்லால் (36) என்பது தெரிந்தது. மேலும் தப்பிச்சென்றது அதே பகுதியை சேர்ந்த மோகன் (54) மற்றும் அவருடைய மகன் நாராயண் என்பதும் தெரியவந்தது. பித்தளை நகைகளை தங்க நகைகள் என கூறி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கர்லாலை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே பதுங்கி இருந்த மோகன், நாராயண் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com