தஞ்சையில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவு முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் தொடங்கி வைத்தார்

தஞ்சை விமான படைத்தளத்தில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவு முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் தொடங்கி வைத்தார்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் விமானப்படை தளம் உள்ளது. இந்த தளம் 1940-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இந்த விமானப்படை தளம் செயல்பாட்டில் இருந்து வந்தது.

இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா பகுதியின் பாதுகாப்பிற்காகவும், அண்டை நாடுகள் மூலம் நம் நாட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சமாளிக்கவும் தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுகோய்-30 ரக போர் விமானங்களை இயக்குவதற்கான பணிகள் நடந்து வந்தன.

தரம் உயர்வு

சுகோய் ரக போர் விமானங்கள் இயக்குவதற்கு வசதியான படைத்தளமாக கடந்த 2013-ம் ஆண்டு இந்த தளம் தரம் உயர்த்தப்பட்டது.

சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்துடன் பிரமோஸ் ஏவுகணையை இணைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு வெற்றி பெற்றதையடுத்து இந்த ரக போர் விமானத்தில் இருந்து தரை இலக்கை நோக்கி பிரமோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி நடத்தப்பட்டது.

புதிய படைப்பிரிவு தொடக்கம்

இந்த சோதனை வெற்றி அடைந்ததையடுத்து தரம் உயர்த்தப்பட்ட தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமான படைப்பிரிவை நிரந்தரமாக ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்திய விமானப்படையில் டைகர் சார்கிஸ் என பெயரிடப்பட்ட எண்-222 என்ற விமானப்படை அணி உருவாக்கப்பட்டது.

பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்களுடன் கூடிய புதிய விமானப்படைப்பிரிவு தொடக்கவிழா தஞ்சை விமானப்படை தளத்தில் நேற்று காலை நடந்தது.

முப்படைகளின் தலைமை தளபதி

விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் கலந்து கொண்டு புதிய படைப்பிரிவை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஸ்.பதோரியா பேசினார்.

விழாவில் இந்திய விமானப்படை அதிகாரிகள் அதுல்குமார் ஜெயின், அமித்திவாரி, பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் சதீஷ்ரெட்டி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையுடன் கூடிய சுகோய்-30 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்னிந்தியாவில் 2-வது படை தளமாக தஞ்சை விமானப்படை தரம் உயர்ந்துள்ளது.

வீரர்கள் சாகசம்

தஞ்சை விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையுடன் கூடிய சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானப்படை அணி தொடக்கவிழாவில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் சாகசம் செய்தனர். நான்கு சாரங் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர். 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதுவது போல் வந்து திடீரென மேலே பறந்து செல்வது, நேராக பறந்து சென்று பின்னர் அப்படியே தலைகீழாக பறந்து வருவது என பல்வேறு சாகசங்களை செய்தனர். இந்த சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளித்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் 6 சூரியகிரன் ரக போர் விமானங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த போர் விமானங்களை தலைகுப்புற ஓட்டியபடி சென்று வீரர்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். 3 தேஜாஸ் ரக விமானங்களும் பறந்து சென்றன. சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் வானில் பறந்தபோது அனைவரும் கைதட்டினர். வானில் பறந்து சென்று விட்டு மீண்டும் தஞ்சை விமானப்படை தளத்துக்கு திரும்பி வந்தபோது அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தஞ்சை விமானப்படை தளத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பலமான படை

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது தெரியும். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என நவீன தொழில்நுட்பம் மூலம் புதிய கருவிகளை கண்டுபிடிப்போம். நமது முப்படைகள் பலமானதாக உள்ளது. நமது வீரர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. முப்படைகளில் சேர அதிகமானோர் வருகின்றனர். நாங்கள் வீரர்களை தேர்வு செய்வதில் கடினமான வழிமுறைகளை கையாளுகிறோம். எந்த சூழ்நிலையிலும் தேசப்பற்றுடன் பணியாற்றக்கூடிய இளைஞர்களை முப்படைகளில் சேர்ப்பதற்கான பணி நடந்து வருகிறது.

இந்திய பெருங்கடல் அருகாமையில் உள்ளதால் தஞ்சை விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இந்திய பெருங்கடலில் சீனா கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கும், தஞ்சை விமானப்படை தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பு இல்லை. நமது படையை தரம் உயர்த்தியாக வேண்டும்.

பாகிஸ்தானுடன் போர் வர வாய்ப்பு?

பாதுகாப்பு தொடர்பாக கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் சுதந்திரம் உள்ளது. குறிப்பாக வணிக இயக்கம் நடக்கும் கடல் வழியில் கொள்ளையர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக கண்காணிப்பில் ஈடுபடுவது இயல்பானது. எல்லா நாடுகளுக்கும் சுதந்திரம் இருக்கிறது. தஞ்சையில் இந்த விமானப்படை அணி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அதிக அளவு வீரர்களை சேர்த்து அணி விரிவுப்படுத்தப்படும்.

பாகிஸ்தானுடன் விரைவில் போர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என நான் யூகத்தின் அடிப்படையில் கூற முடியாது. எப்போது போர் வந்தாலும் தயாராக இருக்க வேண்டியது ராணுவத்தின் கடமை. எந்த பணியை செய்ய சொல்லி கட்டளையிடப்படுகிறதோ? அதை செய்வதற்காக வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com