விபத்து இல்லாமல் பஸ்சை இயக்கிய டிரைவர் உள்பட 333 பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு அமைச்சர்கள் வழங்கினர்

நாமக்கல்லில் விபத்து இல்லாமல் பஸ்சை இயக்கிய டிரைவர் உள்பட 333 பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
விபத்து இல்லாமல் பஸ்சை இயக்கிய டிரைவர் உள்பட 333 பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு அமைச்சர்கள் வழங்கினர்
Published on

நாமக்கல்,

நாமக்கல்-பரமத்தி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை அலுவலகத்தில் உயிரிழப்பு, விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக பஸ்சை இயக்கிய பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உயிரிழப்பு விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 333 பேருக்கு ஊக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, மாரடைப்பு காரணமாக பஸ் டிரைவர்கள் இறந்த சம்பவங்களில், இறப்பதற்கு முன்னர் பஸ்சை ஓரமாக நிறுத்தி, தான் இறந்த சூழ்நிலையிலும் பஸ்சில் பயணம் செய்த 60-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்த ஒரு சிறு தீங்கும் இல்லாமல் காப்பாற்றிய டிரைவர்களை பாராட்டுவதாக கூறினார். இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண் இயக்குனர் (பொறுப்பு) மோகன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) லட்சுமணன், இந்தியன் ஆயில் நிறுவன கோவை கோட்ட வர்த்தக மேலாளர் சிங்காரவேலன், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூமிபூஜை

நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த பணி இன்னும் 10 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் எனவும், இந்த கட்டிடத்தில் சுமார் 8 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ முகாம்

முன்னதாக நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமினை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், வாய் புற்றுநோய் கண்டறிதல், தோல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

சித்த மருத்துவ பிரிவில் பல்வேறு நோய்களை தீர்க்கும் மூலிகை வகைகள், கீரை வகைகள் குறித்த கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், மருத்துவ பணிகள் (இணை இயக்குனர்) சாந்தி, சுகாதார பணிகள் (துணை இயக்குனர்) சோமசுந்தரம், மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி பாண்டியன் உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com