முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதிய பெண் டாக்டருக்கு ஊக்க மதிப்பெண் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதிய பெண் டாக்டருக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதிய பெண் டாக்டருக்கு ஊக்க மதிப்பெண் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வட்டார வீல் திட்டத்தில் பணியாற்றும் டாக்டர் தீபிகா லின்சி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு கடந்த 26.2.2014-ல் தூத்துக்குடி மாவட்டம் லூர்தம்மாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2016-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினேன். 16.12.2016-ல் இந்த ஆஸ்பத்திரி மேம்படுத்தப் பட்டது. இதைதொடர்ந்து 30.8.2019 வரை அங்கு பணியாற்றினேன்.

பின்னர் கடந்த 31.8.2019 முதல் புதுக்கோட்டை வட்டார வீல் திட்ட ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறேன். இது கிராமப்புற மருத்துவமனையின் கீழ் உள்ளது.

இந்தநிலையில் முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் 1200-க்கு 426 மதிப்பெண் பெற்றுள்ளேன். கிராமப்பகுதியில் பணியாற்றினால் ஆண்டுக்கு 5 ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டுமென அரசாணை கூறுகிறது. கிராமப்புற கணக்கீட்டின்படி நான் 3 ஆண்டுகள் 4 மாதம் பணியாற்றியுள்ளேன். கடந்த முறையும் இதேபோல் தான் ஊக்க மதிப்பெண் கணக்கிடப்படவில்லை. தற்போதும் ஊக்க மதிப்பெண் வழங்காமல் என்னை நிராகரித்துள்ளனர்.

எனவே, எனக்குரிய ஊக்க மதிப்பெண்ணை வழங்கி முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் எனக்கு வாய்ப்பு வழங்கவும், எனக்காக ஒரு சீட்டை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் விசாரித்தார்.

முடிவில் மனுதாரருக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலாளர் பரிசீலிக்க வேண்டும். கவுன்சிலிங்கில் மனுதாரர் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com