நெல், நிலக்கடலை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - கலெக்டர் ராஜாமணி தகவல்

கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நெல், நிலக்கடலை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல், நிலக்கடலை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - கலெக்டர் ராஜாமணி தகவல்
Published on

கோவை,

மத்திய அரசு சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரதமந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, அப்பயிர்களை சாகுபடி செய்யும் நிலையில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். நடப்பாண்டு காரிப் பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி, துவரை, உளுந்து, பாசிப்பயிறு, கொள்ளு, நிலக்கடலை, எள் மற்றும் வாழை, மஞ்சள், மரவள்ளி, கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதில் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.621, சோளத்திற்கு ரூ.209, மக்காச்சோளத்திற்கு ரூ.588, பருத்திக்கு ரூ.459 என காப்பீடு கட்டணமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதேபோல் நிலக்கடலைக்கு ரூ.578, எள்ளுக்கு ரூ.262, அனைத்து பயிறு வகைகளுக்கும் ரூ.331, வாழைக்கு 4,418, மஞ்சளுக்கு ரூ.3,973, மரவள்ளி கிழங்குக்கு ரூ.583, கத்தரிக்காய்க்கு ரூ.1,095, தக்காளிக்கு ரூ.1,417, வெங்காயத்துக்கு 2,112 என காப்பீடு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ள பொது சேவை மையங்கள் அல்லது வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீட்டிற்கான பிரீமியத்தொகை செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com