

ஆலந்தூர்,
சென்னை நந்தனம் 6-வது தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 13-ந்தேதி ராமகிருஷ்ணன் (வயது 75) என்ற முதியவரிடம் ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்தது. இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக சிவகங்கையில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகப்பன் என்ற ரவிகுமார் (42), அனகாபுத்தூரை சேர்ந்த சீனிவாசன் (45), ஏழுமலை என்ற ரஜினி ஏழுமலை (55), மயிலாப்பூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற கருக்கா வெங்கடேசன் (44), கோட்டூர்புரத்தை சேர்ந்த நெல்சன் (47), ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த மதன்ராஜ் (46) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
கைதான 6 பேரையும் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள், முதியவர் ராமகிருஷ்ணனிடம் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அப்போது கைதான ராகப்பன், கிண்டி நீச்சல் குளம் அருகே வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள காலி இடத்தில், நாங்கள் 6 பேரும் சேர்ந்து 2 பேரை கொலை செய்து, அவர்களது உடலில் கல்லைக்கட்டி கிணற்றில் வீசியதாக போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின்பேரில் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டி, இன்ஸ்பெக்டர் சந்துரு, மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட 2 பேரின் உடல்களை தேடினார்கள்.
சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு கிணற்றில் வீசப்பட்ட 2 பேரின் உடல்களை அழுகிய நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் கொலையானவர்கள், வடபழனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான அண்ணாதுரை (55) மற்றும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த தங்கபாண்டி (34) என தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசாரிடம் ராகப்பன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கொலையான அண்ணாதுரையின் உறவினரான ஆனந்தராஜ் என்பவருக்கும், ஆவடி நகராட்சி (தற்போது மாநகராட்சி) கவுன்சிலரான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் அண்ணாதுரை சொன்னதால் நான், எனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கவுன்சிலர் முருகனை கொலை செய்தோம்.
இந்த கொலை வழக்கு நடத்த செலவுக்கு பணம் தராமல் அண்ணாதுரை ஏமாற்றி வந்தார். கடந்த 8-ந்தேதி வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்றபோது, அண்ணாதுரையிடம் வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டபோது மீண்டும் எங்களுக்குள் பிரச்சினை எழுந்தது.
கிண்டியில் பாழடைந்த நிலத்தில் காவலாளியாக பணியாற்றும் எனது கூட்டாளி நெல்சன் (47) என்பவரிடம் இது தொடர்பாக கூறினேன். அதற்கு நெல்சன், கிண்டியில் இடம் பார்க்க வருமாறு அண்ணாதுரையை அழைத்து வந்து பேசிகொள்ளலாம் என்றார்.
அதன்படி வெங்கடேசன் மூலமாக அண்ணாதுரையை கடந்த 9-ந்தேதி கிண்டியில் இடம் விற்பனைக்கு இருக்கிறது என அழைத்தோம். அண்ணாதுரையுடன், சூளைமேட்டை சேர்ந்த தங்கபாண்டி என்பவரும் வந்தார். அவர்கள் இருவருடன், நாங்கள் 6 பேரும் சேர்ந்து அனைவரும் கிண்டியில் உள்ள அந்த காலி இடத்தில் வைத்து ஒன்றாக மது அருந்தினோம்.
அப்போது, கவுன்சிலர் கொலை வழக்கு செலவுக்கு பணம் தரும்படி மீண்டும் அண்ணாதுரையிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் 6 பேரும் அண்ணாதுரையை சரமாரியாக தாக்கினோம். இதை தடுக்க முயன்ற தங்கபாண்டியையும் தாக்கினோம். இதில் 2 பேரும் இறந்துவிட்டனர். யாருக்கும் தெரியாமல் இருக்க இருவரது உடலிலும் கல்லைக்கட்டி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கிண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராகப்பன், காவலாளி நெல்சன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். வழிப்பறி தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் தனியாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தங்கபாண்டி மாயமானதாக, 3 நாட்களுக்கு முன்பு சூளைமேடு போலீசில் அவருடைய மனைவி ராஜலட்சுமி புகார் அளித்து உள்ளார்.
கொலை சம்பவத்துக்கு பிறகு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் முதியவர் ராமகிருஷ்ணனிடம் வழப்பறி செய்து உள்ளனர். அந்த வழப்பறி வழக்கில் கைதானதால், இந்த இரட்டை கொலை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் கிண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.