திருச்சி மாநகராட்சி அதிகாரி உள்பட 2 பேருக்கு கொரோனா மணப்பாறையில் 4 போலீசாருக்கும் தொற்று

திருச்சி மாநகராட்சி அதிகாரி உள்பட 2 பேருக்கும், மணப்பாறையில் 4 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாநகராட்சி அதிகாரி உள்பட 2 பேருக்கு கொரோனா மணப்பாறையில் 4 போலீசாருக்கும் தொற்று
Published on

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பகுதியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது மாநகராட்சியின் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஒருவருக்கும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுப்பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோட்ட அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நலன்கருதி, கோட்ட அலுவலகத்தில் துரிதமாக கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். கிட் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே 7 பேர் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள், கொரோனா உறுதியானால், தாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவதாக தெரிவித்தனர். அவர்களிடம், சுகாதாரத்துறை தரப்பில் ஒரு உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று, சுகாதாரத்துறை விதிகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறோம் என்ற உறுதிமொழி பெறப்பட்டது. மேலும் தா.பேட்டையை சேர்ந்த ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவரை சுகாதாரத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் ஏற்கனவே 3 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 4 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மணப்பாறை போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மணப்பாறை பகுதியில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுபோல் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய ஆணையாளர்கள் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கணினி பிரிவு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், அலுவலகத்துக்கு வெளிப்பகுதியில் பிளச்சிங் பவுடரும் தூவப்பட்டது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com