திருப்பூரில் 4 நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை - ஆவணங்களை எடுத்து சென்றனர்

திருப்பூரில் 4 நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் ஆவணங்களை எடுத்து சென்றனர்.
திருப்பூரில் 4 நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை - ஆவணங்களை எடுத்து சென்றனர்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. வழக்கத்தை விட விசேஷ நாட்களில் நகைக்கடைகளில் விற்பனை களைகட்டும். பொங்கல் திருநாள் நெருங்கி வருவதாலும், தை மாதம் திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்பதாலும் நகைக்கடைகளில் நகை விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. இதனால் அனைத்து நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நகைக்கடை வைத்துள்ளவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் தங்களது நகைக்கடைகளின் கணக்குகளை சமர்ப்பித்து வருகிறார்கள். இதற்கிடையே முறைகேடுகளில் ஈடுபடுகிற நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள நடராஜ் செட்டியார் ஜூவல்லரி, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள கந்தவேல் ஜூவல்லரி, மாநகராட்சி வீதியில் உள்ள கே.ஆர்.பி.எஸ். ஜுவல்லரி, மங்கலம் ரோட்டில் உள்ள அம்மன் ஜூவல்லரி ஆகிய 4 பிரபல நகைக்கடைகளுக்குள் காலை 10.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.

ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு குழுவாக சென்ற அதிகாரிகள், கடைக்குள் சென்றதும் கடை ஷட்டரை முதலில் பூட்டினர். பின்னர் கடையில் உள்ள நகை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனர். அதை தொடர்ந்து நகை விற்பனை குறித்து கடை ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த நகைக்கடைகள் தங்கம் கொள்முதல் செய்தது மற்றும் நகைகள் விற்பனை செய்யப்பட்ட ஆவணங்கள், கடையில் இருப்பு உள்ள நகைகளின் ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகள், கணினியில் பதிவு செய்யப்பட்ட கணக்கு, விற்பனை போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் சில நகைக்கடைகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் இந்த சோதனை குறித்த எந்த விவரமும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்த சோதனையின் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com