செந்தில்பாலாஜியின் நண்பர்கள் நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜியின் நண்பர்கள் நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
Published on

கரூர்,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து செயல்பட்டு வருகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவரில் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்பாலாஜியும் ஒருவர்.

இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். செந்தில்பாலாஜியும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.

கரூர் ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், ராயனூர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவரது நண்பர்களும், உறவினர்களான ஜவுளி தொழில் அதிபர்கள் தியாகராஜன், சாமிநாதன், மனோகரன், ஓட்டல் தொழில் அதிபர் சுப்ரமணியன், நிதி நிறுவன அதிபர் நவ்ரங் சுப்ரமணியன், ஒப்பந்ததாரர்கள் சங்கர், ஆனந்த் உள்ளிட்டோர் வீடு மற்றும் ஜவுளி, நிதி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு நவ்ரங் சுப்ரமணியன் நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை முடிந்ததும் அவரை தனி இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்தது. காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்ட நிறுவனங்களுக்கு சென்று மீண்டும் சோதனை நடத்தினர். ராமகிருஷ்ணபுரம் வடக்கு தெருவில் தியாகராஜன் பங்குதாரராக உள்ளதாக கூறப்படும் ஒரு ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும் வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனையையொட்டி ஜவுளி நிறுவனத்தின் முன்பக்க கதவை நிறுவனத்தின் ஊழியர்கள் மூடினர். மேலும் கிரில் கேட் கம்பிகள் வழியாக யாரும் பார்க்க முடியாத வகையில் துணியை போட்டு போர்த்தினர். இதேபோல ராமகிருஷ்ணபுரத்தில் சாமிநாதன் ஜவுளி நிறுவனத்தில் நேற்றும் சோதனை நடந்தது.

நரிக்கட்டியூரில் நவ்ரங் சுப்ரமணியன் வீடு, ராம்நகரில் தியாகராஜனின் வீடு, செங்குந்தபுரம் பழனியப்பா தெருவில் ஒரு ஜவுளி நிறுவனத்திலும் சோதனை நடந்தது. நேற்று பிற்பகலுக்கு பிறகு ஒரு சில இடங்களில் சோதனை நடைபெறவில்லை. 8 இடங்களில் மட்டும் சோதனை நடந்ததாக வருமான வரித்துறை அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர்.

கடந்த 2 நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் மட்டும் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

தற்போது கிடைத்த ஆதாரங்களை வைத்து அடுத்து முக்கிய பிரமுகர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மற்றும் அவர்களது நிறுவனங்களில் சோதனை நடத்தப்படலாம் என தெரிகிறது. அதற்காக தான் இந்த சோதனை கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 2-வது நாள் சோதனையால் கரூரில் நேற்றும் பரபரப்பு ஏற்பட்டது..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com