ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பது அதிகரிப்பு

ராமேசுவரம்,தனுஷ்கோடி கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் மீன்வளம் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பது அதிகரிப்பு
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 400-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. இதன் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி சில விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதில் ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து விசைப்படகுகளில் மீன்பிடிப்பது அதிகரித்து வருகிறது.

ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து சில நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் தடை செய்யப் பட்ட சுருக்குமடி வலைகளில் தொடர்ந்து மீன் பிடித்து வருகின்றனர். தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் பெரும்பாலான நாட்களில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து சர்வ சாதரணமாக மீன் பிடித்து வருகின்றனர். இதனால் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு உட்பட்ட இந்திய கடல் பகுதியில் மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிக்கும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களை தடுக்க வேண்டிய மீன்துறை அதிகாரிகளோ, அதை தடுக்காமலும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். எனவே இது குறித்து மத்திய-மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகள் மற்றும் மீனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து மீன் வளத்தை காக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com