கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நெல்லையில் சுகாதார பணிகள் தீவிரம்

நெல்லையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நெல்லையில் சுகாதார பணிகள் தீவிரம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முதலில் வேகமாக பரவியது. மாவட்டத்தில் 63 பேர் வரை பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதிக்கு பிறகு கொரோனா தொற்று பரவுவது அடியோடு நின்றது. அதே நேரத்தில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள் பலர் படிப்படியாக பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நெல்லை மாவட்டம் ஆபத்தான சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. விரைவில் பாதுகாப்பான பச்சை மண்டலத்துக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்குள் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 83 வயது முதியவர் கொரோனாவால் இறந்தார்.

நேற்று முன்தினம் வரை 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நெல்லை மாநகரில் கொரோனா பரவாமல் தடுக்க மாநகராட்சி சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதார பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தூய்மை பணியாளர்கள், கணக்கெடுப்பு களப்பணியாளர்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வீடு, வீடாக சென்றும், தெருக்களிலும் கிருமி நாசினி பொடி தூவப்பட்டு, திரவம் தெளிக்கப்பட்டது.

நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன் பகுதி, காந்தி நகர், கோடீசுவரன் நகர், பேட்டை மெயின் ரோடு, காயிதே மில்லத் சாலை, மேற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதிக கவனத்துடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டோர் வீடுகளில் குப்பைகளை சேகரித்து விட்டு கிருமி நாசினியும் தெளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com