உளுந்து செடியில் நோய் தாக்குதல் அதிகரிப்பு - விவசாயிகள் கவலை

உடுமலை அருகே உளுந்து செடியில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உளுந்து செடியில் நோய் தாக்குதல் அதிகரிப்பு - விவசாயிகள் கவலை
Published on

தளி,

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை, வாழை, கரும்பு, சப்போட்டா, கொய்யா போன்ற நீண்டகால பயிர்களும் காய்கறிகள் மற்றும் தானியங்கள் பருவநிலைக்கு ஏற்றாற்போல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த சூழலில் முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் கிழுவன்காட்டூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உளுந்து 80 நாள் பயிராகும். உளுந்து சாகுபடியில் உழவு முதல் அறுவடை வரையில் ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் செலவு செய்துள்ளோம். இதனால் உளுந்து பயிர்களும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உளுந்து செடிகளை மர்மநோய் தாக்கியது. மருந்து தெளித்தும் அதன் தாக்குதல் கட்டுபடவில்லை. இதனால் உளுந்து செடிகள் பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி உணவிற்காக வருகின்ற பறவைகள் உளுந்து காய்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் உளுந்து சாகுபடியில் நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிழுவன்காட்டூர் பகுதியில் ஆய்வு செய்து உளுந்து செடிகளில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலை கட்டுப்படுவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com