

பிச்சாட்டூர் அணை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் 1.853 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, சிட்றபாக்கம் பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் 2 நாட்களாக பிச்சாட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி அளவில் ஏரியின் நீர்மட்டம் 30.8 அடியாக பதிவாகியது. 1.800 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று 2 மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆரணியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.