அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு பாடாலூரில் மாதிரி பள்ளிக்கூடம்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் செயல்படுவதால், அங்கு இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பாடாலூரில் மாதிரி பள்ளிக்கூடம் இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு பாடாலூரில் மாதிரி பள்ளிக்கூடம்
Published on

பெரம்பலூர்,

கோடை விடுமுறை முடிந்து வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு வீடாக சென்று ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது அரசு பள்ளிகளின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள், சாதனைகள், அரசு வழங்கி வரும் சலுகைகள், ஆங்கில வழிக்கல்வி குறித்து பெற்றோரிடம் எடுத்து கூறி, அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளும், பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் 3 அரசு பள்ளிகளும், எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 34 அரசு பள்ளிகளும், 7 அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவ -மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால், அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக சில அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை ஆங்கில வழிக்கல்வி கடந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1-க்கும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தனியார் பள்ளிகளில் படிக்க வசதி இல்லாத ஏழை, எளிய மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல் சிறந்த கல்வி வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி பள்ளிக்கூடம் தொடங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அந்த பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை கற்பிக்கப்படும். அதன்படி இந்த கல்வி ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாடல் பள்ளிக்கூடம் தொடங்கப்பட உள்ளது.

அதற்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாடாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி பள்ளிக்கூடம் தொடங்கப்படுவதால், அதற்காக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பறைகள் கட்டப்பட்டு, அதன் சுவர்களில் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு உள்ளது. மேலும் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி வளாக சுற்றுச்சுவரில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படமும், இயற்கை ஓவியங்கள் மற்றும் தமிழக கலாசாரத்தை வெளிப்படுத்தும் படங்களும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிக்கு நிகராக பாடாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி காட்சியளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com