சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கண்ணாடி, நீர்மோர் கமிஷனர் சங்கர் வழங்கினார்

சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் போலீசாருக்கு தொப்பி, கண்ணாடி மற்றும் நீர்மோர் ஆகியவற்றை போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.
சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கண்ணாடி, நீர்மோர் கமிஷனர் சங்கர் வழங்கினார்
Published on

சேலம்,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 102 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால் இளநீர், தர்பூசணி, பப்பாளி, மோர், பழ ஜூஸ் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பானங்களை மக்கள் பருகி வருகிறார்கள்.

இந்தநிலையில், கோடை காலத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆண்டுதோறும் மாநகர காவல்துறை சார்பில் நீர்மோர், குளிர்ச்சி தரக்கூடிய தொப்பிகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டநிலையில், வெப்பத்தை தணிக்கும் வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், அவர் போலீசாருக்கு கருப்பு கண்ணாடி, தொப்பி ஆகியவற்றையும் வழங்கினார். தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் போக்குவரத்து போலீசார் பணிபுரியும் இடத்திற்கே சென்று நீர்மோர் வழங்கப்படும் என்றும், இது 4 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர்கள் தங்கதுரை, சியாமளாதேவி, உதவி கமிஷனர் ஈஸ்வரன், போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் ஜூலியஸ் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com