குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அணைகள் நீர்மட்டம் உயர்ந்தது

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அணைகள் நீர்மட்டம் உயர்ந்தது
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பரவலாக மழை

வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணங்களால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் லேசான மழை பெய்தது. தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது சபரிமலை சீசனையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் குற்றாலம் அருவிகளில் குளித்துச் செல்கின்றனர்.

மணிமுத்தாறு அணை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 121.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,511 கன அடி தண்ணீரும், அணையில் இருந்து வினாடிக்கு 1,005 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.18 அடியாக உயர்ந்தது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99.90 அடியாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டு, 100.15 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 318 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 40 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் இந்த 3 அணைகளும் விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 75.80 அடியாக உள்ளது. அணைக்கு 225 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. இந்த அணை நீர்மட்டம் 2.75 அடி உயர்ந்துள்ளது.

கருப்பாநதி-குண்டாறு

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.23 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரும் 300 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி இருப்பதால் அணைக்கு வரும் 18 கன அடி தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்கிறது.

வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 31 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 21.62 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 98.50 அடியாகவும் இருந்தது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அம்பை -2, ஆய்குடி -4, சேரன்மாதேவி -9, மணிமுத்தாறு -1.20, ராதாபுரம்- 14, சங்கரன்கோவில்- 2, செங்கோட்டை- 1, நெல்லை -1.20, பாபநாசம் -61, சேர்வலாறு -47, கடனா-10, ராமநதி-15.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com