என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி வருகிறது கருத்தரங்கில் தகவல்

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி வருகிறது என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி வருகிறது கருத்தரங்கில் தகவல்
Published on

திருச்சி,

தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருச்சியில் தொலைநோக்கு- 2019 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் திருச்சி நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 3-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக தொடங்கப்பட உள்ள கலந்தாய்வில் எப்படி பங்கேற்க வேண்டும், வேலைவாய்ப்பு உள்ள கல்லூரிகள் மற்றும் பாடபிரிவுகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது பற்றி ஐ.சி.டி.அகாடமி செயல் துணை தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜி.பி.எஸ். நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், நாஸ்காம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும், கே.7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான புருசோத்தமன், அரசு தொழில் நுட்ப இயக்ககம் சார்பில் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சாந்தி ஆகியோர் பேசினர்.

இதனை தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் முனிரத்தினம், செயலாளர் செல்வராஜ், நாஸ்காம் முன்னாள் இயக்குனர் புருசோத்தமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலை வாய்ப்பு பிரச்சினை என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாட திட்டத்திலோ இல்லை. மாணவர்கள் பொறியியல் பாட படிப்போடு அத்துறையை சார்ந்த புதிய தொழில் நுட்பங்கள், அயல்நாட்டு மொழிகள், சாப்ட் ஸ்கில் எனப்படும் மென் திறன்கள் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். டி.சி.எஸ், சி.டி.எஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் புதிதாக வெளிவரும் சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிய வண்ணம் உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் நிறுவனங்கள் எதிர்பார்க்க கூடிய திறன் மேம்பாட்டு கல்வியை முதலாம் ஆண்டில் இருந்தே கற்றுக்கொடுத்து வருகின்றன.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாக ஒரு தகவல் நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. மென்பொருள் துறையில் தற்போது உலகம் முழுவதும் 45 லட்சம் பொறியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த 2017-18-ம் ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் வரும் கல்வியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த கருத்தரங்கில் திருச்சி பகுதியை சேர்ந்த சுயநிதி கல்லூரி அதிபர்கள் மற்றும் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com