காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
Published on

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம் நாகர்கோவில் டென்னிசன் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லீடன்ஸ்டோன் வரவேற்றார். இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

மாநில செயலாளர் ராஜகுமார் தொடக்க உரையாற்றினார். இதில் செயலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சுபின், துணைத்தலைவர்கள் சுப்பையா, வேல்முருகன், சூரியநாராயணன், இணைச்செயலாளர்கள் ராயல் ஆறுமுகம், ஷிபு, செய்யதலி, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஐவின் ஆகியோர் பேசினார்கள். மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். முடிவில் நாகர்கோவில் நகர தலைவர் கில்பர்ட் சதீஸ் நன்றி கூறினார்.

நிரந்தரப்பணி

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளில் 1-4-2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது. தரப்படுத்தப்படாத ஊதிய விகிதங்களின்கீழ் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பேரூராட்சி தற்காலிக பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட ஊதிய ஏற்றமுறையுடன் கூடிய நிரந்தரப்பணி மற்றும் வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது.

வழக்குகள் ரத்து

30 சதவீதம் பணியிடங்களை குறைத்து தேவைப்படும் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பிட குழு அமைத்து போடப்பட்டுள்ள அரசாணை எண் 56-ஐ ரத்து செய்து முறையான காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை நியமனம் செய்ய அரசை கேட்டுக் கொள்வது. பேரூராட்சிகளில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள், ஓட்டுனர்கள் குடிநீர் திட்ட ஊழியர்கள், முதலானவர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கி முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு நடந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்போது கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com