

சேலம்,
சேலம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிகளில் உள்ள சாலை பாதுகாப்பு ரோந்து குழுக்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு ரோந்து சீருடைகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அதிகளவில் இருப்பதால் அந்தந்த பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் மிக எளிதாக கல்வி கற்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ செல்வங்கள் சிறந்த கல்வி கற்க வேண்டும் என்பதற்காக இலவசமாக காலணி, சீருடை, நோட்டு, புத்தகம், பேக், சைக்கிள் மற்றும் அறிவுபூர்வமான கல்வி கற்பதற்கு மடிக்கணினி, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 படித்தால் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இன்றைக்கு கல்வித்தரம் உயர்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.