இந்தியா- சீனா உறவு நன்றாக உள்ளது - சீன தூதர் பேட்டி

இந்தியா - சீனா இருதரப்பு உறவுகள் நன்றாக உள்ளதாக புதுவையில் சீன தூதர் தெரிவித்தார்.
இந்தியா- சீனா உறவு நன்றாக உள்ளது - சீன தூதர் பேட்டி
Published on

புதுச்சேரி,

இந்தியாவுக்கான சீன தூதர் லூஷாஹு நேற்று அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்தார். அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். பின்னர் சட்டசபை வளாகத்திற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுவை - சீனாவிற்கு இடையே சுற்றுலா, வர்த்தகம், கல்வி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம், சீனாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் சீன தூதர் கூறுகையில், இந்தியா-சீனா இடையே இருதரப்பு உறவும் நன்றாக இருக்கிறது. சீனா - புதுச்சேரி இடையே கலாசார, பண்பாட்டு ரீதியாகவும், தொழில் வாய்ப்புகளை எவ்வாறு இருதரப்பும் பரிமாறிக்கொள்வது என்பது குறித்தும் கலந்துரையாடினேன் என்றார்.

இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனா நாட்டின் தாழி நகரத்துடன் கல்வி, சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாக புதுச்சேரி ஒப்பந்தம் செய்துகொள்ள முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும். அடுத்தகட்டமாக தூதரக அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும்.

புதுவையில் தொழில் தொடங்க வரும்படி சீன நாட்டுக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு பதில் அளித்த சீன தூதர், பீஜிங் நகருக்கு வந்தால் தொழில்முனைவோர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவை சேர்ந்த தத்துவ பேராசிரியர் கூசூ என்பவர் வரைந்த ஓவிய கண்காட்சி அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனை சீன தூதர் திறந்துவைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com