இந்திய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: மங்களூரு துப்பாக்கி சூடு குறித்து சி.ஐ.டி. விசாரணை - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
இந்திய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: மங்களூரு துப்பாக்கி சூடு குறித்து சி.ஐ.டி. விசாரணை - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மங்களூருவில் கடந்த 19-ந் தேதி 144 தடை உத்தரவை மீறி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. பதிலுக்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பா மங்களூருவுக்கு நேரில் சென்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் முதல்-மந்திரியை சந்தித்து, தங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் மங்களூருவுக்கு சென்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று மங்களூருவுக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கர்நாடக காங்கிரஸ் சார்பில் நிதி உதவியை அவர் வழங்கினார்.

இந்த நிலையில் மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், மங்களூரு துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் பேரில் இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா சிவமொக்காவில் இயற்கை விவசாய உணவு பொருட்களின் கண்காட்சியை நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் அமைதியாக வாழ வேண்டும். அதற்கு மாநிலத்தில் முதலில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள். மங்களூருவில் நடந்த கலவரத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது துரதிர்ஷ்டவசமானது.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையத்திற்கு தீவைத்தனர். அதனால் போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுதொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மாஜிஸ்திரேட்டு தலைமையில் நீதி விசாரணையும் நடத்தப்படும்.

ஆனால் போலீசாரின் செயலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறிவருகிறார். அவருடைய கருத்து தவறானது. அவ்வாறு செய்ய வேண்டியது தேவையில்லை. குமாரசாமிக்கு தலை கெட்டுப்போய் உள்ளது. அதனால் அவர் தேவையில்லாமல் பேசுகிறார்.

மங்களூரு போராட்டத்தில், கேரளாவில் இருந்து வந்த சில வாலிபர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களாலேயே போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அவர்கள் முகமூடி அணிந்து கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஊடுருவிய அவர்களை விரைவில் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்வார்கள்.

போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடும்போது அதை பார்த்துக் கொண்டு போலீசாரால் எப்படி அமைதியாக இருக்க முடியும். அதனால்தான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விசாரணையை நிராகரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறினோம். ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா சி.ஐ.டி. விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார். இதை ஏற்க மாட்டோம். நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும். அதனால் கர்நாடக அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com